திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தை உட்பட்ட பருவதமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள கெங்கலமகாதேவி கிராமத்தில் ஒரு அதிசய கோவில் உள்ளது. இந்த கோவிலை அங்குள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் வழிபட்டு வருகிறார்கள். அதுதான் திரிசூல வேப்பமர மாரியம்மன் கோவில். அது என்ன திரிசூல வேப்பமர மாரியம்மன் கோவில் என்று தானே கேட்கிறீர்கள் இந்த பதிவில் அந்த கோவிலை பற்றி முழுமையாக காண்போம்.
பர்வதமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள கிராமங்களில் ஒரு கிராமம்தான் கெங்கலமகாதேவி. இங்கு பால்கார் ராஜா என்பவரது வீட்டுக்கு நேராக காட்டுப்பாதையில் ஒரு வழி செல்கிறது. இந்த வழி பருவதமலை மலையேற செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவிலுக்கு செல்லும் வழியும் கூட. பருவதமலை மலையேற்ற பாதை அதாவது படிகட்டு பாதையை ஆரம்பிக்கும்போது அங்கு மூன்று கோவில்கள் இருக்கும். அதாவது வீரபத்திரன் கோவில், ரேணுகாம்பாள் கோவில், வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த மூன்று கோவில்களை வழிபட்ட பிறகு தான் பக்தர்கள் பருவதமலை படிகட்டுப் பாதையில் ஏறத் தொடங்குவார்கள். அந்த வீரபத்திரன் கோவிலுக்கு செல்லும் வழிக்கு நேரடியாக செல்ல இந்த குறுக்கு வழியில் கூட பருவதமலை ஏற முடியும். இந்த ரகசிய வழி இந்த ஊர் மக்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அப்படி இந்த வழியே நேராக செல்லும்போது சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் ஒரு ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி ஓரமாக ஒரு வேப்பமரம் திரிசூலம் வடிவில் அமைந்திருக்கும். இயற்கையாகவே அம்மன் கையில் இருக்கும் திரிசூலம் வடிவில் அமைந்திருக்கும் இந்த மரத்தை தெய்வமாக இங்குள்ள கிராமத்து பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்த வேப்ப மரத்தில் அடியில் மாரியம்மன் சிலை வைத்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஆதலால் தான் இந்த கோவிலுக்கு திரிசூல வேப்பமர மாரியம்மன் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது.
ஏரிக்கரை ஓரமாக பர்வத மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏரிக்கரை மாரியம்மன் கோவில் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மாதாமாதம் அமாவாசை பௌர்ணமி அன்று இந்த கோவிலின் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அதற்கு இங்குள்ள கிராமத்து பொதுமக்கள் முதற்கொண்டு அக்கம் பக்கத்து கிராமத்து பொதுமக்கள் தான் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இந்த கோவில் உருவானதற்கு ஒரு கதை உள்ளது.அந்த கதை என்னவென்றால்,
ஒரு காலத்தில் ஒரு ஆடு மேய்ப்பவர் ஒருவர் இங்கு வந்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் இந்த வேப்ப மரத்தை சுற்றி புதர்கள் மண்டி இருந்தது. கோவில் எதுவும் இல்லை. வெறும் காடு தான். அந்த நேரத்தில் அந்த ஆடு மேய்ப்பவருக்கு திடீரென ஒரு சத்தம் கேட்டது.
அந்த குரல் கேட்டவுடன் பயந்து கொண்டு ஆடு மேய்ப்பவர் ஓட முயன்றார்; அப்பொழுது மகனே ஓடாதே பயப்படாதே, நான் தான் மாரியம்மன் பேசுகிறேன். நான் இந்த வேப்ப மரத்தில் வாழ்கின்றேன். என்னை சுற்றி புதர்கள் மண்டியுள்ளது ஆதலால் எனக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. இந்த முட்புதரில் இருந்து என்னை விடுவித்து இங்கு ஒரு ஆலயம் நிறுவு" என்று அந்த குரல் சொல்ல அதைக் கேட்ட ஆடு மேய்ப்பவர் பயம் தெளிந்து நம்மிடம் பேசியது தெய்வம் தான் என்று நம்பி இந்த விஷயத்தை ஊரில் உள்ளவரிடம் சென்று கூறினாராம்.
அவர் பேச்சை நம்பாமல் என்ன ஏதுவென்று தெரியாமல் உடனே ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்களாம். வந்து அந்த குரல் சொன்னது போல முள் புதரை சீர் செய்து பார்த்தால் உள்ளே திரிசூலம் வடிவில் வேப்பமரம் அமைந்துள்ளது பார்த்ததும் ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
உண்மையிலேயே தெய்வம் வேப்பமரம் வடிவில் திரிசூலம் வடிவில் அமைந்துள்ளதாக நம்பி அந்த வேப்ப மரத்தையே தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அந்தக் குரல் சொன்னது போல அந்த இடத்தில் சிறிய கோவில் கட்டியதாக ஊர் பெரியவர்கள் சொல்லும் கதைகளில் கூறப்படுகிறது.
கோவில் என்றால் நீங்கள் நினைப்பது போல சிமெண்ட், ஜல்லி, மணல் சேர்த்து கட்டிய பெரிய கோவில் அல்ல. வெட்டவெளியில் வேப்ப மரத்தின் அடியில் மணலில் தான் இன்றளவும் இந்த கோவில் உள்ளது. காரணம் பருவதமலை வனத்துறையினர் இந்த கோவில் காட்டிற்கு உட்பட்ட இடத்தில் கட்ட அனுமதிக்கவில்லையாம். அதனால் மக்கள் யாரும் இந்த கோவிலில் முன்னெடுத்து கட்டவில்லை.
அன்றிலிருந்து இன்று வரை இந்த கோவிலை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த பால்கார் ராஜா என்பவர் தான் பராமரித்து வருகிறார்.
Tags
Paruvathamalai